பூமி சுழலும் வேகத்தை ஏன் உணர முடியவில்லை?

பூமி, தன்னைத் தானே சுழலும் வேகம் மணிக்கு சராசரியாக 1600 கி. மீ. ஆகும். பூமி, சூரியனை சுற்றிவரும் வேகம் சராசரியாக மணிக்கு 107000 கி.மீ ஆகும். மிதிவண்டியில் சராசரியாக நம் பயணிக்கும் வேகம் மணிக்கு 16 கி.மீ. ஆகும். மிதிவண்டியோடு ஒப்பிடும்போது பூமியின் வேகம் பல மடங்கு அதிகம். இருப்பினும், மிதிவண்டியின் வேகத்தை உணர முடிந்த நம்மால் பூமியின் வேகத்தை உணர முடிவதில்லை. ஏனெனில், பூமியும் பூமியைச் சுற்றியுள்ள காற்று மண்டலமும் தொடர்ந்து சீரான வேகத்தில் சுழன்றுக் கொண்டிருப்பதே இதற்கு காரணமாகும். சற்று விரிவாக அலசுவோம்.

நீங்கள் தொடர்வண்டியில் பயணிப்பதாக வைத்துக் கொள்வோம். தொடர்வண்டி நகரத் தொடங்கும்போதும், நிற்கத் தொடங்கும்போதும் மட்டுமே உங்களால் அதன் வேகத்தை உணர முடியும். ஏனெனில், தொடர்வண்டியானது தொடக்கத்திலும் இறுதியிலும் நேரத்தைப் பொறுத்துப் படிப்படியாக வேகத்தினை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ செய்கிறது. மற்ற நேரங்களில் அதன் வேகத்தில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் சீராக இருக்கும். அதாவது மாறாமல் இருக்கும்.  அப்படி மாறாமல் இருக்கும்போது நம்மால் அதன் வேகத்தை உணர முடியாது.

மிதிவண்டியின் வேகம் சீராக இருந்தாலும், அதன் வேகத்தை நம்மால் உணர முடியும். ஏனெனில், எதிர்விசையாக காற்று செயல்பட்டு, நம் மீதும் மிதிவண்டியின் மீதும் ஏற்படுத்தும் உராய்வின் காரணமாக, அதன் வேகத்தை நம்மால் தொடர்ந்து உணர முடியும். ஆனால், தொடர்வண்டியின் வெளிப்புறத்தில் மட்டுமே எதிர்விசையாக காற்றின் உராய்வு செயல்படுகிறது. கூடவே, தொடர்வண்டியைச் சுற்றியுள்ளக் காற்று, தொடர்வண்டியின் வேகத்திலேயே பயணிப்பதால், நம் மீது எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது.     எனவே, நம்மால் தொடர்வண்டியின் வேகத்தை உணர முடியாது.

பூமியானது நாம் பிறப்பதற்கு முன்பிருந்தே, அதாவது பல கோடி ஆண்டுகளாக சீரான வேகத்தில் சுழன்றுக் கொண்டிருக்கிறது. கூடவே, காற்றழுத்த மண்டலமும் தொடர்ந்துச் சுழன்றுக் கொண்டே உள்ளது. அதனால், பூமியின் சுழற்சி வேகத்தினை நம்மால் உணர முடிவதில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக