விளக்கணையும் வரை காத்திரு

அவ்வளவு அழகில்லை அவள்
அடர்கருப்பின் அடையாளம் இவள்

முத்தமிட்டாலும் கன்னம் சிவக்காது
முழுமதியவள் கருப்பென்றும் விலகாது

உலகமே உறங்கிக் கிடக்கும் அவள் மடியில்
ஒருபோதும் அது எனக்கு தவறாய் தெரியாது

சிரித்தாலும் பற்கள் கூட மின்னாது
சிந்தைக்கு ஏனோவள் குறைகள் தெரியாது

மனம் வலிக்கிறபோதெல்லாம்
மடியில் தாலாட்டுவாள்

உடல் குளிர்கிறபோதெல்லாம்
உரசித் தீமூட்டுவாள்

விளக்கணைந்ததும் 
வந்து வாரி அணைத்திடுவாள் 
அவள் வாசத்திலென்னை மூழ்கடித்திடுவாள் 

போர்வைக்குள் 
புகுந்து கிச்சுமூட்டி சிரித்திடுவாள்
பொங்கும் மகிழ்ச்சியில் கதைத்திடுவாள் 

வெளிச்சம்
வந்தால் வெடுக்கென ஓடிடுவாள் 
விளக்கணைந்ததும் மீண்டுமென்னைச் சேர்ந்திடுவாள் 

அவள் அவ்வளவு அழகில்லை 
அதுவென்றுமே அவளுக்கு குறையில்லை

அவள் போதும்
அவள் அன்பு போதும் 
அவள் மட்டுமே போதும்.


#இருள் தேவதை