மழையுதிர் காலம்

எப்பொழுதும்
கேட்டு ரசித்த இடியோசையில்
இன்று, ஏதோவொருவித புதுமாற்றம்.

அழுகுரலும் இடிகுரலும்
இரண்டற கலந்தொலித்ததே காரணம்.

யாருக்கு என்ன ஆனது?
நெஞ்சம் கனகனத்து
பாடாய் படுத்தியது.

மரத்தின் காதில்
காற்று வந்து
ஏதோ சொல்ல,
மகிழ்ச்சியில் மரமோ
ஆனந்தக் கூத்தாடியது.

ஓ..!
வானில் யாருக்கோ
பிள்ளைப்பேறு காலம்.

நெடிய இடியோசையின் இறுதியில்
மௌனம் மட்டுமே மிஞ்சியிருக்க,
நெடுநேர பிரசவப் போராட்டம்
நிறைவுக்கு வந்தது.

என்ன நடந்து இருக்குமோ?
இன்னும் வேகமாய்
இதயம் துடிதுடித்தது.

நெடுந் தூரத்தில்
தாயும் சேயும்
கொஞ்சும் மகிழ்குரல்
காதில் கேட்டது.

அம்மாடி..! என
மனம் மகிழ்ந்து
நிம்மதி பெருமூச்சு விடுமுன்னே
அவளின் கார்மேகக் கண்ணில்
ஏனோ கண்ணீர்த்துளி.

பிறந்தது பெண்ணாய் இருக்குமோ?.