Bucket List (18+) & (18-)


இந்த செவரு மாதிரிதான் நம்ம வாழ்க்கையும். அர்த்தமேயில்லாம நடக்கறதயெல்லாம் வெறிச்சி பார்த்துகிட்டு மட்டும்தான் இருக்கோம். இந்த செவருக்கு பின்னாடி என்ன இருக்குனு நான் தெரிஞ்சிக்கணும்னா நான் என்ன பண்ணனும்? செவர கடந்துப் போகனும். அதே மாதிரிதான், இந்த வாழ்க்கைக்கு அப்புறம் என்ன இருக்குனு நான் பார்க்கணும்னா என் சாவ நான் தேடிக்கணும்.

இப்ப நான் ஃபேன பார்த்தா, அதுல பொணமா தொங்கனும்னு ஒரு ஆசை. ட்ரெயின பார்த்தா, ஒடனே குதிக்கணும்னு ஒரு யோசனை. இப்போ, இந்த பில்டிங்க்ல இருந்து குதிச்சா, எல்லாமே முடிஞ்சிடும் இல்ல!?. இதெல்லாம் எப்பயாது உங்களுக்கும் தோனியிருக்கா? உங்களையும் மீறி ஒரு நிமிசம், தற்கொலைக்கு தூண்டுற அந்த எண்ணங்கள் வர்றத ஃபீல் பண்ணியிருக்கிங்களா? சாவுதான் இந்த உலகத்துலயே சுகமான விசயமா இருக்காம். முடிவே....யில்லாத ஒரு சுகம்.

இந்த விட்ட கொற தொட்டக் கொறனு சொல்லுவோமில்ல, அதெலாம் இல்லாம நிம்மதியா போய் சேரதுக்கும், சில விசயத்தை செஞ்சிமுடிச்சிட்டு சாகறதுக்கு பேருதான் பக்கெட் லிஸ்ட் (Bucket List). இதோ, I’m writing my Bucket List என நான்-லினியர் பேட்டர்ன்னில் (Non-Linear Pattern) விரிகிறது Bucket List குறும்படம்.

வாழ்க்கையில் நாம் அனைவருமே விரக்தியின் இறுதியில், ஒருமுறையாவது தற்கொலை செய்துக் கொள்ள நினைத்திருப்போம். நீங்கள் நினைத்தீர்களோ இல்லையோ, நான் நினைத்தது மட்டுமில்லாமல் முயன்றும் இருக்கிறேன். வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் எண்ணம் எப்போது உங்களுக்கு வருகிறதோ, அப்போதுதான் உங்களின் வாழ்க்கை இன்னமும் அழகாகப் போகிறதென்று அர்த்தம். அந்த எண்ணம், நம் வாழ்க்கையை மீட்டுணந்துப் பார்த்து, சரியான பாதையில் செலுத்துவதற்கான ஒரு மிகச்சிறந்ததொரு வாய்ப்பாக கருதுங்கள். உங்களின் இறுதி முடிவின் முற்றுப்புள்ளியில், மீண்டுமொரு புள்ளிகள் வைத்து தொடருங்கள்.

வாழ்க்கையில் நாம் கொடுக்க வேண்டியதும், பெற வேண்டியதும் ஏராளமாய் இருக்கிறது. தற்கொலை செய்துக் கொள்ளும் எண்ணம் தோன்றினால், உங்களுக்குப் பிடித்தவர்களிடம் பேசுங்கள். பிடித்தவர் யாருமில்லையென்றால், உங்களுக்கு அறிமுகமேயில்லாத நபரிடமாவது பேசுங்கள். அவர் நம்பிக்கையற்றவர்களாக இருந்தாலும் பரவாயில்லை, உங்களின் இரகசியத்தை பாதுகாக்காதவர்களாக இருந்தாலும்கூட பரவாயில்லை. ஏனென்றால், உங்களின் இரகசியத்தை காப்பதைவிட, உங்களைக் காத்துக் கொள்வதே இந்த நிலையில் மிகவும் முக்கியமானது. நீங்கள் எப்படிப்பட்டவராக இருந்தாலும் பரவாயில்லை. நீங்களில்லாது வாழ் முடியாத சில நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்காக மீண்டுமொருமுறை யோசியுங்கள். உங்களுக்கு தற்கொலை எண்ணம் போகும் வரை, மீண்டும் மீண்டும் யோசித்துக் கொண்டே இருங்கள்.

நீங்கள், பலமுறை யோசித்தும் உங்களுக்கு தற்கொலை செய்துக் கொள்ள வேண்டுமென தோன்றிக் கொண்டேயிருக்கிறதா? அப்படியானால், நான் கடைப்பிடித்த 10 ஆலோசனைகளை நீங்களும் ஒருமுறை முயற்சித்துப் பாருங்கள். பின்பு, நீங்கள் தாராளமாக உங்களின் முடிவை எடுத்துக் கொள்ளுங்கள்.
  1. நீங்கள் இறந்துப்போக நினைப்பதற்கான காரணங்களை பட்டியலிடுங்கள். பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்.
  2. நீங்கள் தற்கொலை செய்துக் கொள்வதற்கான முடிவை 100 நாட்களுக்கு தள்ளி வையுங்கள்.
  3. நீங்கள் வாழ்வதற்கு ஒரு காரணம் கூட இல்லையாயென தேடுங்கள்.
  4. உங்களின் அன்பை பெறுவதற்கும் செலுத்துவதற்கும் தகுதியானவர்கள் யாராவது இருக்கிறார்களாவென கண்டறியுங்கள்.
  5. தனிமையை தற்கொலை செய்துக்கொள்ள விடுங்கள். தனிமைக்கு நீங்கள் துணையாக இருக்காதீர்கள். 100 நாட்களுக்குள் புதிதாக அறிமுகமேயில்லாத 10 நண்பர்களையாவது நட்பாக்கிக் கொள்ளுங்கள். நிறைய பேசுங்கள்.
  6. வாரத்தில் ஒருமுறை, அருகிலிருக்கும் அரசு மருத்துவமனையின் பிணவறைக்கு சென்று வாருங்கள். அங்கே அழுதுக் கொண்டிருப்பவர்களின் குரலை உள்வாங்கி உணருங்கள். நீங்கள் இல்லையென்றால் உங்கள் குடும்பமும், நண்பர்களும் என்ன ஆவார்கள் என யோசியுங்கள்.
  7. நீங்கள் இதுவரை செல்லாத, அறிமுகமில்லாத, மொழித் தெரியாத மக்கள் வசிக்கும் இடத்திற்குச் செல்லுங்கள். அவர்களின் வாழ்க்கை முறையை ஆராயுங்கள்.
  8. 100-வது நாளின் முடிவில், நீங்கள் இறந்துப் போவதற்கான காரணங்கள் நிறைந்த பட்டியல் இன்னமும் தீர்வு கிடைக்காமல் அப்படியே இருக்கிறதாவென பாருங்கள். தீர்வு கிடைத்திருக்கிறதென்றால், இப்போது என்ன செய்துக் கொண்டிருக்கிறீர்களோ அதையே தொடர்ந்து செய்யுங்கள். வாழ்க்கை அற்புதமாகும்.
  9. இவ்வளவு செய்தும் உங்கள் மனம் தற்கொலைச் செய்துக் கொள்ள தூண்டுகிறதென்றால், மீண்டும் ஒருமுறை யோசியுங்கள்.
  10. முதல் ஆலோசையிலிருந்து மீண்டும் தொடங்குங்கள். நீங்கள் இறந்துப்போக நினைப்பதற்கான காரணங்களை பட்டியலிடுங்கள். பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் தற்கொலை செய்துக் கொள்வதற்கான முடிவை 100 நாட்களுக்கு தள்ளி வையுங்கள்.
அந்த செவத்துக்கு பின்னாடி என்ன வேணாலும் இருந்துட்டு போகட்டும். Life is Beautiful என இறப்பதை மறந்து, வாழ்க்கையை வாழத் தொடங்குகிறான் Bucket List குறும்படத்தின் நாயகன். அப்படி அவன் மனதை மாற்றியது எது?. நான் சொல்வதைவிட நீங்களே கீழேயுள்ள காட்சி இணைப்பில் பார்த்துத் தெரிந்துக் கொள்ளுங்கள். 18 வயது நிரம்பியவர்கள் மட்டும் பாருங்கள். அருமையானதொரு குறும்படம். கூடவே, தற்கொலை செய்துக் கொள்ளும் எண்ணத்தில் இருக்கிற 18 வயது நிரம்பாதவர்களும் பாருங்கள்.