தாகம்


கருணை, சொற்களின் பிடியிலிருந்தும் காணாமல் போயிருந்தது. சூரியனின் நீண்ட கைகள் பாலைவனத்தின் பிளவுகளில் தாகத்திற்காக தண்ணீரைத் தேடித் துழாவிக் கொண்டிருந்தது. பத்து நூறு வருடங்களுக்கு முன்பு பெய்த மழையின்போது சேமித்து வைத்த தண்ணீர் கொஞ்சம் மிச்சமிருந்தது. இந்த பாலைவனத்தின் மனித மாமிச வேட்டையில், இன்னமும் நில மகளின் மடிமீது எஞ்சியிருப்பது இவனும் இவனது மகனும் மட்டுமே. சேர்த்து வைத்த மனித மாமிசங்களும், தண்ணீரும் இன்றோடு தீர்ந்துப் போக, இவனையும் இவனது மகனையும் பாலைவனத்தின் பசி, கொஞ்சம் கொஞ்சமாய் தின்னத் தொடங்கியது. சில மணித்திலாயங்களில், ஈரமென்பது இவர்களின் எச்சிலில் கூட இல்லாமல் போனது. தொண்டைக் குழலும் வற்றிப் போனது. காதுகள் மங்கி, கண்கள் ஒடுங்கி அரை மயக்கத்தின் பிடியில் சிக்கினார்கள்

உணவில்லாமல் ஒரு நொடியும் இவர்களின் உடலில் உயிர் தங்காது என்கிற நிலையில், ஒட்டிப்போன உடலெலும்புகளின் மத்தியில் உயிரை எப்படி எமனுக்கு தெரியாமல் ஒளித்து வைப்பதென நீண்ட நேரமாய் யோசித்தான். இறுதியில், யோசித்தவனின் முகத்தில் எதோவொருவித கனத்த முடிவுக்கு வந்ததற்கான பாரம் தெரிந்தது. வாளினை கையில் எடுத்தான். காற்சிலம்பு தாங்கியவனின் கால்களின் ஆட்டத்தைவிட, வாளெடுத்த இவனது கைகள் வேகமாய் நடுக்கத்தைத் தாங்கி ஆடின. கடந்த கால நினைவுகள் கண்முன் வந்துப் போனது. நினைவுகளின் கழுத்தை, இமைகளில் இறுக்கிப் பிடித்து மூச்சடிக்கி மௌனத்தில் ஆழ்த்தினான். பெருமூச்சு விட்டான்.  நெஞ்செலும்புகளைக் கல்லாக்கிக் கொண்டான். மீண்டும் வேகமாய் வாளை எடுத்தான். அடுத்த கணத்தின் மறுநொடியில், ஒரு உயிர் மட்டுமே உயிர்த்திருந்தது.

அடுக்குமாடிக் குடியிருப்பின் குளு குளு அறையில், வானைப் பிளக்கும் அலறலோடு கனவுலகிலிருந்து விழித்தான். கண் விழித்தவனின் காதுகளில் நிஜவுலகின் தண்ணீர் சொட்டும் சத்தம் கேட்டது. எதிர்கால சந்ததியின் நெஞ்சில் ஈரம் பரவியது.