அவளொரு மரம்


விதையை
மண்ணுக்குள் சேர்த்தான்
விவசாயி ஒருவன்

தனக்குள்
விதையை வாங்கினாள்
பாசமிக்க பூமித்தாய்

கருவினில்
உயிர் வந்து
இதயம் இசைத்தது

உடல்களின்
ஒவ்வொரு பாகமும்
ஒசையின்றி உயிர்த்தது

கருவிட்டு
கைகள் நீட்டியபடி
உலகம் கண்டாள்

கற்புக்கரசி
இலைகளை ஆடையாக
உடுத்திக் கொண்டாள்

தலையில்
வாச மலர்களை
சூடிக் கொண்டாள்

பருவம்
தன்னைத் தீண்ட
காய்த்துக் கனிந்தாள்

அழகில்
வான் தாண்டி
வளர்ந்து நின்றாள்

பொறுக்காத
புயலவன் பொறாமையில்
பொன்னுடல் தீண்டினான்

பொன்மகள்
தன்மானம் காக்க
தரையில் விழுந்தாள்

மீண்டும்
இவளை பூமியிலிட்டான்
இன்னொரு விவசாயி

மீண்டும்
தனக்குள் வாங்கினாள்
பாசமிக்க பூமித்தாய்.