செல்வாயணம்

தெருவிலொரு
தேவதையைக் கண்டேன்

கண்டவுடன்
காதலும் கொண்டேன்

தயங்கியபடி
அவளருகினில் சென்றேன்

எனக்குள்
நானே சண்டையிட்டேன்

ஒருவழியாய்
அமைதி அடைந்தேன்

திக்கித்திக்கி
வாய் திறந்தேன்

எச்சிலை
எனக்குள் விழுங்கினேன்

முதலில்
காற்று வந்தது

முடிவினில்
பேச்சு வந்தது

அவளின்
பெயரைக் கேட்டேன்

நிலநோக்கியவள்
என்னை நோக்கினாள்

கண்களால்
நெஞ்சத்தைக் குத்தினாள்

என்னுருவத்தை
ஏறயிறங்க படமெடுத்தாள்

என்னிதயம்
படபடவென படபடத்தது

முகமெலாம்
வேர்த்து விறுவிறுத்தது

உள்ளங்கையில்
குளம் ஊற்றெடுத்தது

நான்
ஓடிவிடலாமாயென யோசித்தேன்

ஏதோவொரு
முடிவுக்கு வந்தாள்

மொட்டவிழும்
சத்தம் கேட்டது

தேனீக்கள்
அவளைச் சுற்றியது

கண்களில்
காதல் மின்னியது

மெல்ல
மலரிதழ்களை திறந்தாள்

அவள்
பெயர் சீதையென்றாள்

நான்
நொடியில் ஓடிவந்துவிட்டேன்

பயந்துவிட்டேனென
யாரும் நினைக்காதீர்

இன்னொரு
செல்வாயணம் எதற்கு..?

மன்னிக்கவும்,
இன்னொரு இராமாயணமெதற்கு..?