கற்பனா

கற்பனையில்
கண்ட வொருத்தியை
கவிதையில் பொருத்தி
கண்மணியென பெயரிட்டேன்

அவளை
கம்பனில் கொஞ்சமும்
காமனில் கொஞ்சமும்
கலந்து பாடினேன்

உவமையில்
உருவம் கொடுத்து
உலகத்தினழகைக் குழைத்து
உள்ளத்தால் சிலையாக்கினேன்

சட்டென
வெட்டிய மின்னலில்
அவளுக்குள் உயிர் பூத்தது;
எனக்குள் காதல் பூத்தது

அவள்
நெற்றியைக் கண்டேன்;
குங்குமமாய் சிவந்தேன்

அவள்
கருவிழியைக் கண்டேன்;
காதலில் மயங்கினேன்

அவள்
மூக்குழலிசைக் கேட்டேன்;
முரடன் மென்மையானேன்

அவள்
காதுமடலைக் கண்டேன்;
கீதத்தில் பூபாளமானேன்

அவள்
பூவிதழ்களைக் கண்டேன்;
தேனீயாய் உருவெடுத்தேன்

அவள்
சிரிப்பைக் கண்டேன்;
சிறையிலிட்ட கைதியானேன்

அவள்
கருங்கூந்தலைக் கண்டேன்;
காற்றினுள் தென்றலானேன்

அவள்
கழுத்தைக் கண்டேன்;
மஞ்சள் தாலியானேன்

அவள்
நெஞ்சத்தைக் கண்டேன்;
நொடிப்பொழுதில் தஞ்சமானேன்

அவள்
கொடியிடைக் கண்டேன்;
அங்கேயே மரமானேன்

அவள்
காற்பாதங்களைக் கண்டேன்;
கவிதையென திகைத்தேன்

அவள்
நகங்களை நறுக்கினாள்;
நான் பிறைநிலாவென பெயரிட்டேன்

அவள்
பூவனத்தில் புகுந்தாள்;
நான் பூவெதுவென கேட்டேன்

அவள்
பொன்மானைக் கேட்டாள்;
நான் மாரீசனவதாரம் கேட்டேன்

அவள்
தேனைக் கேட்டாள்;
நான் அவளிதழைக் கேட்டேன்

அவள்
காதலைக் கேட்டாள்;
நான் கவிதையைத் தந்தேன்

அவள்
என்னுயிரைக் கேட்டாள்;
நான் அவளையே தந்தேன்

அவள்
சீதையாக உருவெடுத்தாள்;
நான் குழம்பி நின்றேன்

இப்போது
நானென்ன உருவெடுப்பது?
இராமவுருவமா? இராவணவுருவமா?