கூடு

திருவண்ணாமலை, இந்தப் பெயர் கேட்டதுமே மனதுக்குள் ஏதோ இனம்புரியாதவொரு ஆனந்தம் தொற்றிக் கொள்ளும். இரைத் தேடிப் பறக்கும் பறவை, மீண்டும் தன் கூட்டை அடைந்த உணர்வு உண்டாகும். படிப்பையும், பல படிப்பினைகளையும் கற்றுத் தந்த இடம். என்னை பலவாறாக செதுக்கி முழுமனிதனாக உணரச் செய்த இடம். சொற்ப சொற்களில் சுருங்கச் சொன்னால், புத்தருக்கு போதி மரமென்றால் எனக்கு திருவண்ணாமலை.

சில ஆண்டுகளுக்குப்பின், திருவண்ணாமலைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றிருந்தேன். நான் பார்த்த திருவண்ணாமலைக்கும், நிகழ்கால திருவண்ணாமலைக்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள். சாலைகள் அகலப் படுத்தப்பட்டிருந்தது. அதனால் பல மரங்கள் வெட்டப்பட்டுமிருந்தது. இருவழிச் சாலைகளெல்லாம் ஒருவழிச் சாலைகளாக உருமாறியிருந்தன. அவசரத்தில் சிறுநீர் கழிக்கிற இடங்கள்கூட ஆகாய உயரக் கட்டிடமாக மாறியிருந்தன. எல்லாம் காலத்தின் கோலமென்று மனதில் நினைத்துக் கொண்டேன்.

இருசக்கர வாகனத்தின் தாகத்தைத் தீர்ப்பதற்காக இராமகிருஷ்ணா உணவகத்துக்கு அருகிலுள்ள எரிபொருள் நிலையத்தில் வண்டியை நிறுத்தினேன். அருகிலொரு அறிவிப்பு பலகை கட்டித் தொங்கவிடப் பட்டிருந்தது. அதில், ‘பற்றட்டை ஏற்றுக்கொள்ளப் படாது' என ஆங்கிலத்தில் எழுதியிருந்தது. கையில் பணமில்லாததால் வண்டியை தாகத்தில் தவிக்கவிட்டபடி, மீண்டும் உதைத்து உயிரூட்டி கிளப்பினேன். அடுத்ததாக, பாலசுப்பிரமணியர் திரையரங்குக்கு அருகிலொரு எரிபொருள் நிலையம் உள்ளது. சரி, அங்கே போவதற்குள் பணம் கக்கும் இயந்திரத்திலிருந்து செலவுக்கு தேவையான பணத்தை எடுத்துக் கொள்ளலாமென, சாலையோரங்களில் கண்களை மேயவிட்டேன். சில பணம் கக்கும் இயந்திரங்கள் மூடப்பட்டிருந்தது; சில திறந்திருந்தாலும் அதில் பணமில்லை.

அக்னி வேந்தன் அண்ணாமலையார் கோவிலருகில் ஒரு இயந்திரம் மட்டும் பணத்தைக் கக்கிக் கொண்டிருந்தது. அதனாலேயே அங்கே ஏகப்பட்ட கூட்டம் அலை மோதியது. அந்த அலையின் அலைவரிசையில் நானும் ஐக்கியமானேன். ஆனால், அந்த இடத்தில் முன்னதாக பணம் கக்கும் இயந்திரத்தை பார்த்தாக நினைவில் இல்லை. புதிதாக முளைத்திருக்கும் போலும் என்று மனதில் நினைத்துக் கொண்டேன்.  அதை, அந்த பளபளக்கும் இயந்திரமும், குளிரூட்டப்பட்ட அறையும் உறுதி செய்தது. ஒருவரின்பின் ஒருவராக மெதுவாக பணம் எடுத்துக் கொண்டிருந்தனர். நேரம் நகர்ந்ததே தவிர, நகரவாசிகள் நகர்ந்தாக தெரியவில்லை. எனக்கு முன்னால் இரண்டு பேர்; பின்னால் மூன்று பேர் நின்றிருந்தனர். “என்னப்பா இது... பணம் எடுக்க இவ்ளோ நேரம் பண்றீங்க“ என சலித்துக் கொண்டார் எனக்கு முன்னாலிருந்த ஒருவர். எனக்கும் அதே சலிப்புதான், ஆனால் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை.

திடீரென எனக்கு பின்னாலிருந்து யாரோ, எதனாலோ வலது தோள்பட்டையில் கீறுவதைப் போல உணர்ந்தேன். மனம் படபடக்க, பின்னால் திரும்பினேன். கருப்பும் பழுப்பும் கலந்த மாதிரியானதொரு அழகிய மைனாக் குஞ்சு என் தோளோடு தோள் சாய்ந்திருந்தது. இது மாதிரியான அனுபவம் முன்னெப்போதும் உண்டானதில்லை. இந்த உணர்வை விளக்குவதற்கு வார்த்தைகளை வலைவீசித்தான் தேட வேண்டும். அப்படியொரு ஆனந்தம் மனதுக்குள். இயற்கையின் பரிசத்தில் மெய் மறந்தேன். இதையெல்லாம் கோவில் மதில் சுவரின் மேலிருந்து பார்த்துக் கொண்டிருந்தது தாய் மைனா. பறவையின் மொழியில் தனது மகளை மேலே பறந்துவர சொல்லி அது அழைத்தது. அது எனக்கு அரைகுறையாய் புரிந்தது. தோளின் மேலிருந்த அந்த மைனாக் குஞ்சை மெல்ல கைகளில் எடுத்து, தாய் பறவையை நோக்கி பறக்கவிட்டேன். அவ்வளவு உயரத்தை பறக்க முடியவில்லை போலும். கீழே விழுந்து, சாலையின் ஓரமாக அங்குமிங்குமாக தத்தித் தாவியது. அதை இரசித்தவாறே வரிசையில் நின்றுக் கொண்டிருந்தேன் நான். என்னைப் போலவே ஒரு குட்டிப் பையனும் இரசித்து, சிரித்துக் கொண்டிருந்தான். என் முறை வந்தது. உள்ளே சென்றதும் அத்தனைக் குளிர்ச்சி. பச்சைப் பசேலென மரங்களின் படங்கள் உண்மையானதென நம்பும்படி தத்ரூபமாக சுவர்களை அலங்கரித்துக் கொண்டிருந்து. வெளியிலிருக்கும் வெயிலின் கடுமையை முற்றிலும் மறக்க செய்தது. கடவுச் சொல்லை அழுத்தி, இயந்திரத்தின் வாயிலிருந்து நானும் கொஞ்சம் பணத்தை பிடுங்கிக் கொண்டு வெளியே வந்தேன்.

இப்போது தாயும் சேயும் சாலையின் ஓரமாக விளையாடிக் கொண்டிருந்தன. பார்க்கவே அவ்வளவு அழகாக இருந்தது. மைனாக் குஞ்சு அதன் இறக்கைகளை விரித்து என்னை நோக்கி பறந்து வந்தது. ஆனால், அது என்னையும் தாண்டி பறந்துச் சென்று, பணம் கக்கும் அறையின் கண்ணாடியில் மோதி கீழே விழுந்தது. நான் பதறிப் போய் கைகளில் ஏந்தினேன். மீண்டும் பறக்கவிட்டேன்.

“சார்.. விடுங்க சார்.. அது அப்படித்தான் அடிக்கடி பண்ணும். கொஞ்சம் நேரத்துல அதுவே போயிடும்“ என்றார் இயந்திரத்தின் காவலாளி.

“ஏங்கய்யா இது இப்படி வந்து மோதிக்குது“ என்றேன் நான்.

“அதெல்லாம் தெரியல சார்,  ஏடிஎம் தொறந்ததுல இருந்தே இப்படித்தான் வழக்கமா நடக்கும்“ என்றார் அவர்.

என்னவாக இருக்குமென மனக்குழப்பத்தோடு, “இந்த ஏடிஎம் தொறந்து எவ்வளவு நாளாகுதுங்கய்யா“ என்றேன் நான்.

“ஒரு ரெண்டு மூணு மாசம் இருக்கும் சார்“ என்றார் அவர்.

“இதுக்கு முன்னாடி இங்க என்னங்கய்யா இருந்துச்சி“ என அடுத்தக் கேள்வியை கேட்டேன் நான்.

சிறிது நேரம் யோசித்துவிட்டு, “அப்படி ஒண்ணுமே இல்லிங்க சார், காலியாதான் இருந்துச்சி.... ஆனா ரெண்டு மூணு மரம் இருந்துச்சிச்சினு நெனைக்கற சார்“ என்றார் அவர்.

இப்போது எனக்கு புரிந்தது கூடற்ற மைனாவின் தவிப்பு. என் கன்னத்தில் யாரோ ஓங்கி அறைந்தது போல உணர்ந்தேன். இந்த பணம் தின்னும் சுயநல சமூகத்தின்மீதும், என்மீதும் எச்சிலை காறி உமிழ்ந்தவாறு இருசக்கர வாகனத்தை உருட்டினேன்.