பிச்சைக்கார நண்பன்

காலம் பல நேரங்களில், காயங்களுக்கு மருந்துப் போடுவதற்கு பதிலாக, கண்ணீரையே பரிசாக தருகிறது. கண்ணீரில் கவலைகள் கரைந்துப் போகுமென நினைத்து, அழுதுத் தீர்த்தபின் கண்ணங்களைப் பார்த்தால் கண்ணீரின் தடங்கள் புதிதாய் பூத்திருக்கின்றன. தனிமை பல நேரங்களில் என்னைக் கொல்கிறது. இருந்தும், அது ஏன் எனக்கு பிடிக்கிறது? எதற்காக இந்த வலி?. அழுகிறேன், அனைவர் முன்னும் சிரிக்கிறேன். உடைகிறேன், காயம் எதுவும் வெளியில் சொல்லாது மறைக்கிறேன். ஏன் நான் இப்படி இருக்கிறேன்?, என்னைவிட ஒரு பைத்தியக்காரன் எவ்வளவோ மேலானவன் என்றே பல நேரங்களில் தோன்றுகிறது.

இறந்துவிடு என்கிறது மனது. ஆனால், நீ எதற்காக இறக்கப்போகிறாய் காரணத்தையும் சொல்லிவிட்டு போ என்கிறது. என்ன காரணம்? யோசித்துப் பார்த்தால், எதுவுமே இல்லை. பின்பு, ஏன் நீ இறக்க வேண்டும்? என்கிறது. காரணம்தான் இல்லையே, மகிழ்ச்சியாய் வாழலாம் என்றால் அதற்கும் ஒரு கேள்வியை நீட்டுகிறது, நீ ஏன் வாழ வேண்டும்? என. அதற்கும் காரணமும் இல்லை, பதிலும் இல்லை. இப்போது நான் என்னதான் செய்வது? எதற்காக இப்படி உளறிக் கொண்டிருக்கிறேன்? யாருக்குத் தெரியும், ஏதோ யாரிடமாவது சொல்ல வேண்டுமென துடிக்கிறது மனது. ஆனால், யாரிடம் சொல்வது? தனிமைதான் நிரந்தரம் என்றால் இனிமை எங்கே வரும்?

கையில் உங்களுக்கு அணு ஆயுதம் எதுவும் கிடைக்கவில்லையென்றால், என் தலையை வெட்டி உங்கள் எதிரிமீது வீசுங்கள். அணுக்குண்டைவிட அதிக சேதத்தை என்னால் ஏற்படுத்த முடியும். ஏனென்றால், ஏகப்பட்ட அழுத்தங்கள் என் மூளைக்குள்ளும் மனதுக்குள்ளும் அடைப்பட்டு கிடக்கிறது. கருணை கொலையில் யாருக்காவது நம்பிக்கையிருந்தால், தயவுசெய்து என் தலையை வெட்டி, என் மனப்போராட்டங்களுக்கு விடுதலைக் கொடுங்கள்.

நீ ஏன் இப்படி இருக்கிறாய் என நீங்கள் கேட்டாலும், நான் ஏன் இப்படி இருக்கிறேன் என நானே என்னைக் கேட்டுக் கொண்டாலும், பதிலாய் மிஞ்சுவது மௌனம் மட்டுமே. யாருக்குத் தெரியும் அனைத்துக் கேள்விகளுக்கும் விடை? தெரிந்தால் சொல்லுங்கள், நான் ஏன் இப்படி இருக்கிறேனென. இவ்வளவு பாரங்களையும் என்னிடம் சொல்லியிருக்கலாமே, ஏன் இத்தனை நாட்களாய் மறைத்தாய்? எனக் கேட்காதீர்கள். நான் எங்கே மறைத்தேன், உங்களால் என் பாரங்களைக் கண்டறிய முடியவில்லை. உங்களால்தான் கண்டறிய முடியவில்லையே, நானே சொல்லிவிடலாமென துணிகிறபோது, கண்களில் கண்ணீர் வந்து திரையாய் மறைக்கிறது.

நான் மிகுந்த மகிழ்ச்சியோடு உலகின் உச்சபட்ச சிரிப்பழகன் நான்தான் என்கிற அளவில் சிரித்திருக்கிறேன். என் சிரிப்பின் பின்னால் அதற்கு சமமாய் இருக்கிற அழுகையையும் கொஞ்சம் தேடிக் கண்டறியுங்கள். நீங்கள் என்னைப் பார்க்கிறபோது, என் கண்கள் வேண்டுமானால் சிரித்துக் கொண்டிருக்கலாம். அது உங்களை நன்றாக ஏமாற்றும். அதில் பலமுறை நீங்கள் ஏமாற்றமடைந்தும் இருக்கிறீர்கள். நீங்கள் கண்களைப் பார்ப்பதற்கு பதிலாக, என் கண்ணங்களைப் பாருங்கள். அதில் நான் அழுதபோது வழிந்த கண்ணீரின் தடம் மிச்சமிருக்கும். அதற்கான காரணங்களை தேடியறியுங்கள். விசத்தேள் கொட்டுகிறபோதும் அதைக் காப்பாற்ற முயலும் துறவியைப் போல, நான் உங்களைக் காயப்படுத்துகிறபோதும் என்னிடம் எப்போதும் அன்பான வார்த்தைகளை வீசிக் கொண்டே இருங்கள்.

நான் யாரென்றுத் தெரியவில்லையா? நான்தான் உங்கள் நண்பன். உங்கள் அன்பான வார்த்தைகளுக்காக காத்திருப்பவன். உடனே, உங்கள் அலைப்பேசியை எடுங்கள், என் அலைப்பேசி எண்ணிற்கு அழையுங்கள். எங்கே இருக்கிறது அலைப்பேசி எண்? என்று என் தளத்தில் தேடாதீர்கள். உங்கள் அலைப்பேசியின் அழைப்புப் பட்டியலில் தேடுங்கள். அதில்தான் இருக்கிறது, உங்கள் நண்பரின் அலைப்பேசி எண். நீங்கள் மிகவும் விரும்புகிற மற்றும் வெறுக்கிற அந்த நண்பன் நான்தான். இப்படிப் புலம்பி எழுதிக் கொண்டிருப்பதும் நான்தான். உடனே என் அலைப்பேசிக்கு அழையுங்கள்.

நீங்கள் அதிகமாக நேசிக்கிற அல்லது அதற்கு கொஞ்சமும் குறைவில்லாமல் வெறுக்கிற உங்கள் நண்பர்களிடம் ஆறுதலாய் நான்கு வார்த்தைகள் பேசுங்கள். உங்கள் அழைப்புப் பட்டியலில் உள்ள அனைத்து நண்பர்களிடமும் நீங்கள் கடைசியாய் எப்போது பேசினீர்கள் என்று யோசியுங்கள். நீண்ட நெடுநாட்கள் ஆகிறதென்றால், உடனே அழைத்து அவரிடம் ஒரு நிமிடமாவது பேசுங்கள். உங்களின் அன்பான வார்த்தைகளைப் பிச்சைக் கேட்டுக் காத்திருக்கிறார்.