புகைப்படக் கலைஞன்


எனக்கான புலிட்சர் விருது எங்கே? இது நான். என்ன பதிவுச் செய்தாய் விருது கொடுக்க? இது என் மனம். இதோ என் புகைப்படமென நீட்டினேன். என் புகைப்படத்தைப் பார்த்தது. கண்ணாடியைச் சரிச்செய்து, மீண்டும் உற்றுப் பார்த்தது. ஒன்றும் தெரியவில்லைப் போலும். என்ன இருக்கிறது இதில்? என்று என்னிடமே மீண்டும் கேட்டது. எல்லாம் இருக்கிறதே நன்றாகப் பார் என்றேன். மீண்டும் பொறுமையாய் பார்த்தது. இந்த முறையும் ஒன்றும் தெரியவில்லைப் போலும். கடுங்கோவத்தில், எனக்கொன்றும் தெரியவில்லை, நீயே சொல் என்றது. இதோ என் புகைப்படம் என்னத் தெரிகிறது என்று நீங்களேப் பார்த்து, என் மனதிடம் சொல்லுங்கள்.

Where is my Pulitzer prize?


அதேதான், நீங்கள் நினைத்தது சரிதான். அதன் அர்த்தத்தையும் உணர்ந்துவிட்டீர்கள். பசித்தவனின் வயிறு, ஒடுக்கப்பட்டவனின் ஓலம், கழிவறையின் துர்நாற்றம், கசக்கி எறியப்படுகிற பூக்கள், ஆதிக்கச் சுரண்டல், அதிகாரத்தின் திமிர், பாலியல் வன்கொடுமை, ஊமை ஊடகங்கள், சாமானியனின் அழுகுரல், பாலினப் பாகுபாடு, வியாபாரக் கல்வியின் முகம், சாதியப் பாகுபாடு, மருத்துவத்தின் பண நோய், ஒரு வண்ணத்திலான தேசியக் கொடி,  வறுமையின் தாகம், ஆணவப் படுகொலை, இளமொட்டுக்களின் மரணம், பெண்ணடிமைத்தனம், வேலையில்லா திண்டாட்டம், போலிச் சுதந்திரம், இன்னும் பல. 

இதெல்லாம் உங்கள் கண்களுக்கும் தெரிகிறதென்றால், நீங்கள் இன்னமும் மனிதாபிமானமுள்ள மனிதனாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறீர்கள். நானும் உங்கள் பக்கம்தான். வாருங்கள் சேர்ந்துச் சொல்லுவோம், என் மனதிடம். “மதிகெட்ட மனமே, காவியின் திரையைக் கொஞ்சம் விலக்கிப் பார். கருப்பில் புதைந்திருக்கிற கருக்கள் தெரியும்“. இப்போது சொல், எனக்கான புலிட்சர் விருது எங்கே?.