அன்பின் மயம்

முந்தி வந்தவன்
ஆரம்பமெதுவோ
பிந்தி வந்தவன்
ஆரம்பமுமதுவே..!

பிந்தி வந்தவன்
முடிவெதுவோ
முந்தி வந்தவன்
முடிவுமதுவே..!

முந்தி வந்தவன்
முந்திச் செல்வதில்
ஆனந்தமும் இல்லை,
பிந்தி வந்தவன்
பின்னே வருவதில்
அழுகையும் இல்லை.

பட்டறிவானாலும்
படிப்பறிவானாலும்
பாதையை சீராக்கினால் சரியே,
அதுவற்று கூராக்கினால் தவறே..!

அடுத்த நொடி
அனுபவத்தை அனுபவித்தே
அறிவேனென்றால் ஆயுளின்
அத்தனை நொடிகளும் போதாது,
அறிந்தவர் சொல்லை
அரவணைப்பதில் தாழ்வேது..?
அகந்தையை அடுப்பிலிட்டால்
ஆனந்தத்திற்கு குறைவேது..?

உந்தன்
பார்வையில் ஆறாவதும்,
எந்தன்
பார்வையில் ஒன்பதாவதும்
பிம்பத்தின் பிழையல்ல

அது காட்சிப் பிழை,
அதைக் காண்பவரின் பிழை.

ஆதியும் அவனே
அந்தமும் அவனே
அவன் திருவடிச் சேர்ந்து
அடங்குவதே வாழ்க்கை
அதில் என்ன‌
முன்வந்தவன் பின்வந்தவன்..?

அனைத்துமே
அன்பின் மயம்
அதுவே செயம்.